வெள்ளி, 27 ஏப்ரல், 2012

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள் எதையும் எதிர்கொள்ளும் உளத்திண்மை ஊட்டப்பட வேண்டாமா?


தைரியலட்சுமி என்ற பெயரைத் தன் மூத்த மகளுக்கு வைக்கும்போது அந்த ஏழை விவசாயி சக்திவேலுவும், அவரது மனைவியும் என்னவெல்லாம் கோட்டை கட்டி இருந்திருப்பார்களோ தெரியாது. பிளஸ் 2 வில் 92 சதவீத மதிப்பெண்கள் பெற்ற செல்ல மகளை மிகுந்த நம்பிக்கையோடு கடனை உடனை வாங்கி பொறியியலாளராக ஆக்க வேண்டும் என்று அண்ணா பல்கலை.யில் சேர்த்திருந்தனர். ஓராண்டு கூட நிறைவடையுமுன் அவளை இப்படி பறிகொடுப்போம், உயிரற்ற அவளுடலைச் சொந்த மண்ணுக்குச் சுமந்து செல்வோம் என்று அந்த அப்பாவி மனிதர் நினைத்திருப்பாரா, பாவம். துணிவாக வாழ்வில் எதையும் எதிர்த்து நின்று போராடி முன்னேறுவாள் என்ற கற்பனையில் மண் விழுந்து, இப்படி ஒரு முடிவெடுக்க எப்படித்தான் துணிந்தாளோ என்று பெற்றோரைப் புலம்ப வைத்துச் சென்றுவிட்டார் மகள்.

ஏப்ரல் 17 அன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்ற தைரியலட்சுமி முதலாவது வகுப்பு முடிந்தவுடன் விடுதி அறைக்குத் திரும்பிவிட்டார். கடந்த சில நாட்களாகவே அவருக்குள் அலைமோதிக்கொண்டிருந்த தாழ்வுணர்ச்சி, அச்சம், ‘இனி மீள முடியாது’ என்று இறுகிப் போன மனம் அவரது தன்னம்பிக்கையை அடித்து வீழ்த்திய மோசமான ஒரு கணத்தில் தனது வாழ்வை முடித்துக் கொண்டுவிட்டார். தமிழ்வழிக் கல்வி படித்துவிட்டுக் கல்லூரியில் கால் பதித்தவர், ஆங்கில மொழிவழியில் பொறியியல் கற்க இயலாதென தோற்றுப் போன உணர்வின் உந்துதலில் இந்த முடிவைத் தேர்ந்தெடுத்துவிட்டார். அதே கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவர் மணிவண்ணன் சில நாட்களுக்குமுன் மேற்கொண்ட தவறான வழியையே லட்சுமியும் பின்பற்றிச் சென்றுவிட்டார். மணிவண்ணன் தனது நொறுங்கிய உள்ளத்தின் ஒரு துகளைக் கூட வெளிக்காட்டாதபடி இருந்தவர். அந்த இறுதி நாளின் மாலையில் கூட, விரைவில் தமது கவிதைத் தொகுப்பை வெளியிடப் போவதாக உற்சாகமாக நண்பர்களிடம் சொல்லிவிட்டுத்தான் தமது முடிவை நோக்கி காலடி எடுத்து வைத்திருந்தார். துணைவேந்தரிடமும், ஆசிரியர்கள், சக மாணவர்களுடனும் நெருங்கிய தோழமை கொண்டிருந்த மணிவண்ணன் காதல் தோல்வியினால் தான் இப்படியான முடிவைத் தேடிக் கொண்டார் என்றனர். குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டு பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் மதிப்பெண் பெற்று, மாநில அளவில் 13 வது இடம் பெற்றிருந்தும்,ஆங்கில வழிக் கல்விக்கு மாறிய உயர்கல்வியில் சிரமங்களை எதிர்கொண்டிருந்தார் என்பதும் சொல்லப்படுகிறது.முழுவிவரங்கள் தெரியவில்லை. சென்னையில் இந்த ஆண்டில் இதுவரை மாணவர் தற்கொலை எண்ணிக்கை 19 என்கிறது காவல்துறை.

இதில் 11 பேர் கல்லூரி மாணவர்கள். எட்டு பேர் பள்ளி மாணவர்கள். பத்தொன்பது பேரில் 12 பேர் பாடச் சுமையின் கனம் தாளாமல் முறிந்தவர்கள்.ஐ ஐ டி சென்னையில் தொடரும் தற்கொலைகள் பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளன.ஜனவரி மாதம், தேர்வுகளில் தோல்வியைச் சந்தித்த அதிர்ச்சியில் பி.டெக் மூன்றாமாண்டு மாணவி அஸ்வினி வாழ்வை முடித்துக் கொண்டதுதான் ஆண்டின் முதல் தற்கொலை. பிளஸ் 2 மாணவி இந்துஜா, கல்லூரி மாணவி நந்தினி இருவரும் தங்களது படிப்புத் தரம் குறித்துப் பெற்றோர் கடிந்து கொண்டதைத் தாங்கமாட்டாமல் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். பள்ளி மாணவர் மாறன், புவனேஸ்வரி, கலையரசி ஆகியோரும் கூட நன்றாகப் படிக்கவில்லை என்று தாய்- தந்தையர் கோபித்துக் கொண்டதையும், அறிவுறுத்தியதையும் அடுத்து மோசமான முடிவை தேடிக் கொண்டவர்கள். இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கை இருபத்தி இரண்டாக உயர்ந்துவிட்டது. கவிதா என்கிற ஒன்பதாம் வகுப்பு மாணவி தேர்வு நேரத்தில் வகுப்புத் தோழி ஒருவருக்கு விடைத்தாளைக் கொடுத்தபோது பிடிபட்டிருக்கிறார். மறுநாள் தந்தையுடன் வருமாறு சொல்லியிருக்கின்றனர். தந்தையோடு சென்றவரைத் தலைமை ஆசிரியை அழைத்துக் கொஞ்சம் கடிந்துகொண்டதோடு அறிவுறுத்தியும் அனுப்பி இருக்கிறார். வீடு திரும்பியவுடன் தந்தை மதிய உணவு வாங்க ஓட்டலுக்குப் போன நேரத்தில் கவிதா தன்னைத் தானே எரித்துக் கொண்டுவிட்டார். மிக அண்மையில் மதுரவாயல் சங்கீதா, அயனாவரம் வினோதினி இருவரும் தேர்வை சரியாக எழுதாத அச்சத்தில் இதே போன்றதொரு தவறான முடிவை எடுத்துப் பெற்றோரைப் பரிதவிக்க விட்டுச் சென்றுவிட்டனர்.

இந்த அகால மரணங்கள் ஒவ்வொன்றும் மனித நேயமிக்க அன்பு இதயங்களைக் கிழித்துப் போடுபவை. நான்கு மாதங்களுக்குள் இருபத்திரெண்டு தற்கொலைகள் என்பது சராசரியாக வாரத்திற்கு ஒன்று என்றாகிறது.இன்றைய கல்விச் சூழல் பற்றித் தொடர்ந்து கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் எழுதிக் கொண்டு தான் இருக்கின்றனர். எரிமலையின் விளிம்பில் இருக்கிறது நிலைமை என்று கூட எச்சரித்து வருகின்றனர். மதிப்பெண்களைச் சுற்றியே ஓயாமல் மாணவர்கள் விரட்டப்படுகின்றனர் என்பது அடிப்படை உண்மை. படி, படி, படி என்ற சொற்கள் மிகப்பெரும் வன்முறை ஆயுதமாகவே மாறி இருக்கிறது. அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கூட பிறகு உளவியல் மருத்துவர்களிடம் சென்று உதவி தேடுவது விரிவாகப் பேச வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம்.அறிவுப் பெருக்கம், உலக ஞானம், இன்ப வெளிக்குள் உலா, புதுமை தேடல், துருவி ஆராய்தல், குடைந்து நீராடுதல் என்பதாக அமைய வேண்டிய கல்வியின் பயணம் உண்மையில் எப்படி இருக்கிறது? வேதாளம் சேர்ந்து, வெள்ளெருக்குப் பூத்து, பாதாள மூலி படர்ந்த மோசமான இடத்தில் வாழ்க்கைப்பட்ட கதையாக கசப்பிலும், வெறுப்பிலும், அச்சத்திலும், அவநம்பிக்கையிலும் கழிகிறது. எதையும் சந்திக்கும் உரம் போட்டு வளர்க்காத குழந்தைப் பருவமாக சமூகம் அடுத்தடுத்த தலைமுறைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறது. வெற்றியின் கனி மட்டிலுமே ருசிக்க வேண்டும் என்ற போதனை சிறு சறுக்கலுக்குக் கூட தாக்குப் பிடிக்காதவர்களாக மாணவப் பருவத்தை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது. ‘எதிர்த்துப் பேசாதே, சொன்னதைச் செய், பேச்சைக் குறை, போய் உட்கார்ந்து படி, உருப்படும் வழியைப் பார்’ என்ற ஒற்றை வழி உரையாடலே வீடுகளில் மிகுந்திருக்கிறது.

குரல்களை ஒலிக்காமல் செய்துவிடுவது உள்ளுணர்வுகளின் இழைகளை எப்படி கிழித்துச் சின்னாபின்னமாக்கும் என்பதை உணர்வதில்லை நாம். எல்லாம் மோசம் போன பின் கதறிக் கதறித் துடிக்கும் சமூகம் தன்னம்பிக்கையும், துணிவும், வீழ்ச்சியிலிருந்து மீண்டு வரும் உளத் திண்மையும் குழந்தைப் பருவத்திலேயே புகட்டப் பட வேண்டியது இன்றியமையாதது என்பதை ஏன் விவாதிப்பதில்லை ? குழந்தைகள் தமது தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும், பலவீனங்களைக் களைந்து கொள்ள வேண்டும், யாராவது ஏதாவது சொன்னால் சகிப்புத் தன்மையோடு அதைக் கேட்டுக் கொள்ளவேண்டும், கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளவும், தள்ள வேண்டியவற்றைத் தள்ளவும் பழக வேண்டும் என்பதெல்லாம் சொல்லி வளர்க்காத தன்மை தானே,திறமை வாய்ந்த மாணவர்களைக் கூட பலி வாங்கிக் கொண்டிருக்கிறது ? தமிழ்வழியில் படித்ததை ஏன் மாணவர்கள் கல்லூரியில் நுழையும் நேரத்தில் தலைக் குனிவாகக் கருத வேண்டும்? தாங்கள் தான் தவறு செய்துவிட்டோமோ என்று பெற்றோரும் சில வேலைகளில் தடுமாறும் இடமாக அது மாறிவிடுகிறது. மொழி பரிமாற்றத்தில் ஆங்கிலத்தின் இடம் சுயமதிப்பை இழக்கும் அளவுக்குச் சென்றது வேதனையானது. தாய்மொழிவழிக் கல்வியை உயர்கல்வியிலும் பெருமையோடு வழங்கி, வேலை வாய்ப்பையும் எதிர்காலத்தையும் உத்தரவாதப்படுத்தாத ஆட்சியாளர்களின் கொள்கை தடுமாற்றங்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகள் அல்லவா பிள்ளைகள் படும் பாடு? ஒட்டு மொத்த மாற்றங்களை உட்கொண்டு ஆரோக்கியமான கல்விச் சூழலைச் சமைத்திட வேண்டிய காலத்தின் அவசியம் முன்னெப்போதையும் விட இப்போது அதிகரித்திருக்கிறது. பத்திரிகைகளைப் புரட்டும் போதெல்லாம் தட்டுப்படும் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர் புகைப்படங்கள் மீது தெறிக்கும் பெருமூச்சு அதைத் தான் சொல்லிக் கொண்டே இருக்கிறது.-எஸ்.வி.வேணுகோபாலன்

கருத்துகள் இல்லை: