புதன், 3 நவம்பர், 2010

ஒரு நாளைக்கு அஞ்சு தடவ அடிக்குறாங்க...”


பள்ளிக்கூடத்திற்கு செல்லும் மாணவ, மாணவிகள் எக்கச்சக்கமான சுமையை ஏற்கெனவே தூக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மாணவிகள் பாலியல் ரீதியான கொடுமைகளைக் கூடுதலாகச் சுமக்கிறார்கள். பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் இந்திய மாணவிகளில் பாதிப்பேர் பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்று பிளான் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, குழந்தைகளின் நிலைமை பற்றி சர்வதேச அளவிலான ஆய்வுகளைச் செய்து வருகிறது. அண்மையில் இந்த அமைப்பு சார்பில் மேற்கொண்ட ஆய்வில் பாலியல் ரீதியிலான தொல்லைகள் மற்றும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவது ஆகியவை பற்றி ஏராளமான தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

50 விழுக்காடு மாணவர்கள் பாலியல் ரீதியான தொல்லைகளை இந்தியாவில் சந்திக்கையில், 65 விழுக்காடு மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் கடுமையான தண்டனைகளைப் பெறுகிறார்கள். இத்தகைய தண்டனைகள் வழங்குவது சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதையும் மீறி இத்தகைய கொடுமைகள் நிகழத்தான் செய்கின்றன. பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் மாணவர்கள் மீதான தண்டனைகள் ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன என்பதை பிளான் இன்டர்நேஷனல் ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

13 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இந்த 13 நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு முன்பாக அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய இரண்டு நாடுகளும் உள்ளன. கொலம்பியா, ஈக்குவடார், பெரு,நிகரகுவா, எல் சால்வடார், குவாதிமாலா, டொமினிகன் குடியரசு, பொலிவியா, ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள்தான் ஆய்வு நடைபெற்ற மற்ற நாடுகளாகும்.

மற்ற நாடுகளில் பாலியல் ரீதியான கொடுமைகள் இருக்கும் நிலையில், இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு வகையான கொடுமைகள் உள்ளன. பாலியல் ரீதியாக மட்டுமில்லாமல், சாதி ரீதியாகவும் கொடுமைகளை அனுபவிக்க வேண்டி வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு இந்த இரண்டும் முக்கியமான காரணங்களாகக் கூறப்படுகிறது. தண்டனைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஏராளமான குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்குச் செல்வதையே நிறுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களைத் தண்டிக்கும் கொடுமைகள் பல வகைகளில் இந்தியாவில் நடக்கின்றன. குச்சிகளாலும், கைகளாலும் அடிப்பது, பல நிலைகளில் நிற்க வைப்பது, நாற்காலியோடு சேர்த்துக் கட்டி வைப்பது என்று மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளின் வடிவங்கள் ஏராளம். இந்திய அரசு தந்துள்ள விபரங்களோடு தனக்குக் கிடைத்துள்ள விபரங்களை பிளான் இன்டர்நேஷனல் ஒப்பிட்டும் பார்த்துள்ளது.

2007 ஆம் ஆண்டு தில்லி மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒரு ஆய்வை நடத்தியது. பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனைகள் குறித்து 3 ஆயிரம் பள்ளிக்குழந்தைகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதேபோல் நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 13 மாநிலங்களில் 12 ஆயிரத்து 500 குழந்தைகளை ஆய்வுக்குழுவினர் சந்தித்தனர். அவர்களிடம் கேட்ட கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களைத் தொகுத்ததில் கடுமையான தண்டனைகள் பள்ளிக்கூடங்களில் தரப்படுவதாக குழந்தைகள் கூறின. மாணவிகளைக்(45 விழுக்காடு) காட்டிலும் மாணவர்களுக்கு(54 விழுக்காடு) அதிகமாகத் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

அதேபோல், பாலியல் ரீதியாகத் தாங்கள் தொல்லைகளுக்கு உள்ளாவதாக கிட்டத்தட்ட பாதிப்பேர் ஆய்வுக்குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்திய மாநிலங்களில் அசாம், மிசோரம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் மாணவர்களுக்கு அதிகமான அளவில் தண்டனை தரப்படுகிறது. மிகவும் குறைவான அளவில் தண்டனை கிடைக்கும் மாநிலங்களாக ராஜஸ்தான் மற்றும் கோவா ஆகிய இரண்டு நிலங்களும் உள்ளன. 13 மாநிலங்களில்தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிகமான மாணவர்கள் இருப்பதால் எங்களால் கவனிக்க முடியவில்லை. அதனால்தான் அடிக்கிறோம் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்து முறை மாணவர்கள் அடிவாங்குகிறார்கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது. பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதால் அரசுக்கு ஏற்படும் இழப்பையும் பிளான் இன்டர்நேஷனல் கணக்கிட்டுள்ளது. இந்தக்கணக்கு எவ்வளவு சரியானது என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்பதுதான் உண்மை.

1 கருத்து:

Singara Velan சொன்னது…

இதில் மிகப்பெரும் வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால், வியாபார ரீதியான கல்விச்சூழ்நிலையை மையமாக கொண்டு கல்வி பயிற்றுவிக்கும் போது தனிப்பட்ட மாணவர்களின் மனநிலையை உணரும் திறன் (அ) தேவை ஆசிரியருக்கு இல்லாமல் போய்விடுகிறது. ஆனாலும் அப்படி மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் அடித்து துன்புருத்தி கல்வியை பயிற்றுவிக்கின்ற பள்ளிகள், ஆசிரியைகளுக்கே வரவேற்புகள் அதிகம். காரணம் கல்வியை அறிவு, சிந்தனை தூண்டலுக்கான கருவியாய் பயன் படுத்தாமல் தொழில், வியாபாரம், பணம் போன்ற மூலாதார நோக்கத்தை மட்டும் மையமாக மாற்றி "வளர்ச்சி பாதை, முன்னேற்ற பாதை" என வரையறை கொடுத்து கல்வியை காசாக்கும் கொள்ளையற்கு இந்த பிஞ்சு பிள்ளைகளின் பெற்றோர் காட்டும் விசுவாசம். "உயிரையும் கரைத்து, உடலையும் வருத்தி, உணவை மறந்து, உழைத்து., என் மகனுக்காக நான் கண்ட சொப்பனம்.. அவனது மதிப்பெண்.,"-என ஏங்கும் பெற்றோர், தன் மகன் படிக்காத போது காரணம் அவனிடம் கேட்காமல் அவனின் ஆசிரியர் சொன்னார் என அவனை கடிந்து, அவன் மனதை புண் படுத்துகின்றனரே தவிர, மானவர்களின் போக்கிற்கான காரணம் அவனிடம் கேட்பதில்லை. இப்படிப்பட்ட பெற்றோரும், ஆசிரியரும் இருக்கும்போது மாணவர்கள்-பாடு எத்தனை வலுவான சட்டம் போட்டாலும்..??????????????? இன்னும் என்னத்த சொல்ல... முடியல......