சனி, 7 மார்ச், 2009

உலகமயமும் மன அழுத்தமும்

மனநல மருத்துவ நிபுணர் டி.சீனிவாசன்

இன்றைய உலகமய சூழ்நிலை மக்களின் மன அழுத்தத்தை அதிகரித்து இருக்கிறது. இந்த நூற்றாண்டையே மருத்துவ உலகம் ‘ மன அழுத்த நூற்றாண்டாக’ அறிவித்திருக்கிறது என்று கோவை மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் சீனிவாசன் கூறினார். கோவைபத்திரிகையாளர் மன்றத்தின் சார்பாக மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மனநல நிபுணர் டாக்டர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்த நூற்றாண்டு மன அழுத்த நூற்றாண்டு. இதில் நம்மை நாம் நிலை நிறுத்தி கொள்ள தினம் தோறும் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை சுற்றி நடக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப அதனை எதிர்கொள்ள நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மனம் என்பது மூளையால் இயங்குவது ஆகும். இதில் செயலாற்றுவது சிந்தனை மற்றும் செயல் ஆகும். சிலர் சிகரெட் குடிப்பதால் மனஅழுத்தம் குறைகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. சிகரெட் குடிக்கும் போது 10 முதல் 20 சதவீதம் மன அழுத்தம் அதிகரிக்கவே செய்கிறது. இது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது நான் தமிழகத்தில் பல துறைகளில் உள்ளவர்களை பார்த்த அளவில் காவல்துறையில் உள்ளவர்கள்தான் மன அழுத்தம் அதிகம் உள்ளவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக அத்துறையில் வேலை செய்யும் பெண் காவலர்கள். அவர்களுக்கு பணி வழங்கும் போது நீண்ட நேரம் ஓரே இடத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது அவர்கள் தங்களது இயற்கை உபாதையைகூட கழிக்க வழியில்லாமல் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக கூறுகிறார்கள். இன்றைய போராட்டம் மனப் போராட்டமாகவே இருக்கிறது. முன்பெல்லாம் உடல் போராட்ட மாக இருந்தது. அதாவது முன்பு இருந்த கால கட்டத்தில் தனது உடல் வலிமையால் மற்றவர்களை சமாளிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அது இன்றைக்கு மன வலிமையால்

தான் சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்றைக்கு இருக்கும் நவீன வளர்ச்சிகளையும், தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி ஒரு பிரச்சனையை எப்படி லாவகமாக தீர்ப்பது என்று யோசிக்க ஆரம்பிக்கிறோம். முன்பு அதற்கான வாய்ப்புகளும் வசதியும் குறைவாகவே இருந்தன.

“காலில் செருப்பு கூட இல்லாத ஏழையாக என்னை படைத்த இறைவனை சபித்துக் கொண்டிருந்தேன். காலே இல்லாதவனை பார்க்கும் வரை” என்று சீன பழமொழி ஒன்று உண்டு. அது போல் இன்றைய கால கட்டத்தில் இருக்கும் வாய்ப்பை உடனே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்டத்திற்குசெல்ல முடியும்.

டென்ஷன்

ஒரு செயலை விரும்பி செய்தால் டென்ஷன் அங்கு இல்லை. அது திணிக்கப்பட்டது என்று நினைக்கும் போதுதான் டென்ஷன் உருவாகிறது. ஒருவர் பதட்டமாக இருக்கும் போது அவரது தசைகள் இறுக்கமாகிறது. அது ஒரு குறிப்பிட்ட நேரம் நீடித்தால் தசைகள் வலிக்க ஆரம்பிக்கின்றன. அதாவது கழுத்தின் பின்புறம் தசை இறுக்கம் ஏற்படுவதால் தலைவலி உண்டாகிறது. அறிவியல் முறைப்படி பார்க்கும் போது பதட்டமாக இருப்பவரின் உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த சுரப்பி அவரை கவனமாக இருக்கவும், பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவியாகவும் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அப்படி செய்யும் போது உடல் ஒரு சீரான நிலையில் இருந்து மாறுபடுகிறது. அதாவது கவனத்தை அதிகரிப்பதற்கு மூளைக்கும், தெம்பை அதிகரிப்பதற்கு தசைகளுக்கும் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. அப்போது வயிற்றுக்கும் குடலுக்கும் இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் வயிறு புரட்டுவது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. சில நேரங்களில் அடிக்கடி மலம், சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ( இதைத்தான் சினிமாக்களில் ஒருவர் பயப்படும் போது சிறு நீர் கழிப்பது போன்று காட்டுவதும் உண்டு ). இதே போன்று பல்வேறு மாற்றங்கள் நடைபெறுகிறது. அதனால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விளைவு ஏற்படுகிறது.

கோபம்

ஒருவர் தன் மீது தனது கட்டுப்பாட்டை இழக்கும் போது ஏற்படுவதை கோபம் என்கிறோம். கோபம் கொல்லும். அதன் உச்ச கட்டம் உயிரிழப்பையும் ஏற்படுத்தும். எவர் ஒருவர் என்னுடைய கோபம் நியாயம் என கூறும் வரை கோபம் தீராது. பொதுவான கருத்து என்னவென்றால் அந்த கோபம் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும் என்றால் அது சரியானது என்பதே ஆகும். அவசரம் காட்டாமல் நன்கு சிந்தித்து செயலாற்றிட வேண்டும். அதற்கு நேரம் தவறாமை மிக முக்கியமானது ஆகும். அது தவிர நம் செயல்
களை பகுத்து ஆராய்தல் நம் பணிகளை மேம்படுத்த, இலக்கை அடைய உதவும். இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது என்பார்கள்.

அது போல் எந்த குறிக்கோளும், செயல்பாடும் இல்லாமல் ஒருவர் இருந்தால் அவரது மனதில் (நெகட்டிவ் தாட்ஸ் ) எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். இன்றைய பொருளாதார மாற்றங்கள் எல்லோரையும் மன அழுத்தத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதனை எதிர்கொள்ள சரியான பயிற்சி இல்லை.

பலர் மன நலம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த 6 மாதங்களில் மன அழுத்தத்தை போக்கும் புத்தகங்களின் விற்பனை பன்மடங்கு அதிகரித்

திருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனநல மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய பெரும்பாலானோர் இன்று சாமியார்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: