செவ்வாய், 5 அக்டோபர், 2010

மனக்காயங்களுக்கு பின்னான உளவியல் சிக்கல்கள்

POST TRAUMATIC STRESS DISORDER

அமெரிக்க மனோவைத்தியர்களின் கூட்டமைப்பின் கருத்துப்படி, அதீத பய உணர்வையும் கொடூரத்தையும் ,ஒன்றுமே செய்யமுடியவில்லையே என்கிற பரிதவிப்பையும் ஏற்படுத்தி, ஆழமான மனக்காயத்தை அல்லது தாக்கத்தை ஏற்படுத்துகிற ஒரு சம்பவத்துக்கு முகங்கொடுக்க நேரிடும் ஒருவரில் உளக்காயத்துக்குபின்னான உளநெருக்கீட்டுச்சிக்கல் எனப்படும் post traumatic stress disorder- PTSD, ஒரு மனநிலை/நோய் நிலை ஏற்படுகிறது.
இப்படி மனக்காயத்தை உண்டுபண்ணும் சம்பவங்கள்:.
1. யுத்தம்
2. சித்திரவதை
3. பாலியல் வன்முறை,வன்புணர்வு
4. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்,சிறுவர்கள் மீதான வன்முறை
5. கடத்தப்படுதல்
6. பயங்கரவாதம்
7. இயற்கை அனர்த்தங்கள்(தீ, சுனாமி,நிலநடுக்கம்,வெள்ளம்,சூறாவளி)
8. பெரும் வாகன விபத்துக்களில் அகப்படுதல்
9. உயிர்க்கொல்லி நோய்(கான்சர் போன்ற நோய் )தனக்கு ஏற்பட்டிருப்பதை அறிதல்
10. கொலை,தற்கொலை உயிரிழப்பு சம்பவங்களை நேரில் பார்த்தல்
இந்தச்சம்பவங்கள் பின்வருவோரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி PTSD ஆக மாற்றமடையும் வாய்ப்பு அதிகம்:
1.ஏற்கனவே இளம் வயதில் இப்படியான சம்பவங்களால் பாதிப்புற்றவர்கள்.
2. ஏற்கனவே மனநிலை/மனநோய்ச்சிக்கல் உடையவர்கள்
3. கல்வியறிவு குறைந்தவர்கள்
4. இளம்பராயத்தினர்
5. பெண்கள்
6. சமுக உறவு /ஆதரவு இல்லாதவர்
7. அண்மைய மனதை நெருக்கும் வாழ்க்கை மாற்றங்கள்.
இவர்களில் பின்வரும் இயல்புகள் தென்படும்:
1. மனத்தை வாட்டமடையச் செய்யும் எண்ணங்களும், மனக்காட்சிகளும் தோன்றிக்கொண்டே இருக்கும்.
2. சம்பவம்போல பயங்கர கனவுகள் தூக்கத்தை குழப்புதல்
3. அந்தச்சம்பவம் மீண்டும் நடைபெறுவதுபோல உணர்தல், அல்லது நடைபெற்றுக்கொண்டிருப்பதாக நடந்து கொள்ளல்.
4. புண்படுத்திய சம்பவம் நினைவூட்டப்படும் சந்தர்ப்பங்களில் உணர்ச்சி வசப்படல்
5. நினைவூட்டப்படும்போது, வியர்த்தல், பதட்டம், நெஞ்சுப்படபடப்பு, உடல் விறைப்படைதல்

இவர்கள் மேலும் ,
· நடந்த சம்பவத்தை நினத்துப்பார்ப்பதையோ, அதைப்பற்றிப் பேசுவதையோ தவிர்ப்பார்கள்.
· சம்பவத்தை நினைவு படுத்துகிற மனிதர்களை, இடங்களை, செயல்களைத் தவிர்ப்பார்கள்.
· சம்பவத்தின் முக்கியமான பகுதிகளை மறந்து விட்டிருப்பார்கள்.
· கொண்டாட்டங்கள்,சந்தோஷங்களை ,தொழில் ஆர்வத்தை,கல்வியில் உள்ள ஈடுபாட்டை இழந்துவிட்டிருப்பார்கள்.
· மற்றவர்களிடமிருந்து விலகி தனிமையை நாடுபவர்களாக இருப்பார்கள்
· சந்தோஷப்படுகிற அன்புகாட்டுகிற, னெகிழ்ந்து போகிற தன்மை அற்று மரத்துபோனவர்களாக இருப்பார்கள்.
· தமக்கு எதிர்காலம் ஒன்று இல்லை என்பதாக நாளைபற்றிய கனவுகள் எதுவுமற்றுப்போனவர்களாக இருப்பார்கள்

அவர்கள் எப்போது அரண்ட நிலயில் இருப்பதால்
· ஒழுங்கற்ற தூக்கம்
· இலகுவில் எரிச்சலடையும், கோபப்படும் தன்மை
· மனதை ஒருமுகப்படுத்தமுடியாத இயல்பு.
· எப்போதும் விழிப்பாக ஆபத்து நிகழலாம் என்ற எச்சரிக்கை மனநிலை
· சிறு ஒலிகள்,அசைவுகளுக்கு கூட மருளும் இயல்பு


சிகிச்சை முறைகள்:

1. இந்த மனநிலை பற்றிய தெளிவும் அறிவும் தகவல்களும் கற்றுக்கொள்ளுதல் முதற்படி; தன் மனக்காயத்தை புரிந்து கொள்ள முடியும்.
2. பய உணர்வு ,கோபம், துக்கம் போன்ற உணர்வுகளை கையாளப்பழகுதல்.
3. துன்பப்படுத்தும் நினைவுகளை, செயல்களை எதிர்கொண்டு அவற்றிற்கூடாக உணர்வுகளை வடியச்செய்தல்.- நாடகங்கள்.காட்சிப்படுதல், சம்பவங்களைப்பற்றி பேசுதல் போன்றன.
4. எண்ணவழி சிகிச்சை –COGNITIVE THERAPY

கருத்துகள் இல்லை: